ஜிம்பாப்வேக்கு எதிராக ஜூலை 23 முதல் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் அசோக் ஷர்மா, தனது கிரிக்கெட் பயணத்தில் குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ராவின் பங்கு மிகப்பெரியது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அசோக் ஷர்மா, ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதற்கான பரிசாகவே தற்போது இந்திய டி20 அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த சையத் முஷ்டாக் அலி டிராபி 2025-26 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 10 இன்னிங்ஸ்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராக அசோக் ஷர்மா சாதனை படைத்தார். இந்த அபாரமான செயல்பாடே அவருக்கு இந்திய அணியின் கதவைத் திறக்க உதவியது என்று கூறலாம்.
“நெஹ்ரா சார் என் வழிகாட்டி”
ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் அசோக் ஷர்மா, “நம்பிக்கை என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ஆஷிஸ் நெஹ்ரா சார் தான். எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் அவரிடமே செல்வேன். ஒருமுறை அவர், ‘நள்ளிரவில் கூட உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை வந்து கேள்; நான் தயாராக இருப்பேன்’ என்று கூறினார். அதன் பிறகு, எந்த பந்தை எப்படி வீச வேண்டும், என்ன மாற்றம் செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் என் பந்துவீச்சு வீடியோக்களை அவருடன் பார்த்து, இன்னும் என்ன மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை பெற்றேன். இந்த ஐபிஎல் சீசனில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு ஒரு பயிற்சியாளர் மட்டுமல்ல, உண்மையான வழிகாட்டி” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஜெர்சி அணிவதே முதல் கனவு
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில் தனது அடுத்த இலக்குகள் குறித்தும் அசோக் ஷர்மா மனம் திறந்துள்ளார்.
“என்னுடைய முதல் கனவு இந்திய ஜெர்சியை அணிவதுதான். அந்த தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜிம்பாப்வே தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி, முடிந்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே தற்போது என் இலக்கு. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதன்பிறகு விரைவில் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்து சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே என் அடுத்த கனவு” என்று கூறியுள்ளார்.
ஜூலை 23, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் இந்த தொடரில், அசோக் ஷர்மாவுடன் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தாக்கூர் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் முதல் முறையாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை சர்வதேச அரங்கிலும் தொடரும் முனைப்புடன் அசோக் ஷர்மா களமிறங்க உள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.



