ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தது.
ஷிகர் தவானின் சாதனையை முறியடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
இவ்வேளையில் நேற்றைய மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை இந்த தொடரில் முற்றிலுமாக வீழ்த்திய இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அவர் பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவானது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது இரண்டாவது சதமாக பதிவாகியிருந்தது.
இதன்மூலம் முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் அவர் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பாக முதல் 2 சதங்களை குறைந்த போட்டிகளில் அடித்த வீரராக ஷிகர் தவான் முதலிடத்தில் இருந்தார். தவான் 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களை விளாசியிருந்தார்.
இதையும் படிங்க : 5 பவுண்டரி, 5 சிக்ஸ் இலங்கை ஏ அணியை பந்தாடி 11 பந்துகளில் 50 ரன்கள்.. வரலாற்று சாதனை – வைபவ் வெறியாட்டம்
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆறாவது ஒருநாள் போட்டியிலேயே இரண்டாவது சதத்தை பதிவு செய்து அவரின் சாதனையை முறியடித்தார். இவர்கள் இருவருக்கு அடுத்து கேதார் ஜாதவ் 9 போட்டிகளிலும், விராட் கோலி 17 போட்டிகளிலும், சுப்மன் கில் 18 போட்டியிலும் 2 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



