சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு சுருண்டது.
தன்னுடைய சதம் குறித்து பேசிய : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 14 பௌண்டரி மற்றும் 3 சிக்சர் என 110 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. அதோடு தன்னுடைய 6 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த அவர் இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதத்தையும் பதிவு செய்திருந்தார். தன்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு பேசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதுகுறித்து சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இன்றைய போட்டியில் நான் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பவர்பிளே ஓவர்களிலேயே எனக்கு ரன்கள் வேகமாக வந்ததால் போட்டியின் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலே கடைசி வரை விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய ஆட்டத்தை பொறுத்தவரை நான் எனக்கு என்ன வருமோ? என்னால் என்ன முடியுமோ? அதை மட்டுமே நம்பி விளையாடி வருகிறேன்.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் மாபெரும் சாதனையை முறியடித்த – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு நிர்வாகமும் மிகப்பெரிய அளவில் ஆதரவினை வழங்கி வருகிறது. இந்த போட்டியிலும் நான் சதம் அடித்தது மகிழ்ச்சி. எப்பொழுதுமே ஒரு நல்ல துவக்கம் கிடைக்கும் போது மிகப்பெரிய ரன்னுக்கு செல்லும் அதிர்ஷ்டம் என்னிடம் இருக்கிறது. அதனாலேயே நான் இரண்டு சதங்களை ஒருநாள் போட்டியில் விளாசியுள்ளேன் என யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.



