கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது சூப்பர் ஓவர் வரை சென்று கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை எழுந்து 155 ரன்களை குவித்தது.
ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய மோஷின் கான் :
பின்னர் தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடுகையில் அவர்களும் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவிக்க போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. பின்னர் சூப்பர் ஓவரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ஒரு ரன்னில் லக்னோ அணியை தடுத்து நிறுத்தியது.
அதன்பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 4 ரன்கள் அடித்து அவர்களை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மோஷின் கான் 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 5 விக்கெட்டுகளின் மூலம் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது மூன்றாவது ஓவரை வீசிய அவர் மெய்டன் ஓவராக வீசியிருந்தார். ஏற்கனவே ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 22ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கெதிராகவும் மெய்டன் ஓவரையும் வீசியிருந்தார். அதோடு நேற்றைய போட்டியிலும் மெய்டன் ஓவரை வீசியதன் மூலம் நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இதையும் படிங்க : அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம் – சுனில் நரேன் ஓபன்டாக்
அதோடு லக்னோ அணிக்காக 5 விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது வீரராகவும் அவர் தனது பெயரை பதிவு செய்தார். அதுமட்டும் இன்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகளாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



