இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியதன் காரணமாக நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தனது வாய்ப்பை இழந்தார். அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாடியிருந்தார்.
அபிஷேக் சர்மாவின் சாதனையை தகர்த்த சஞ்சு சாம்சன் :
ஆனால் இந்திய அணியின் காம்பினேஷன் காரணமாக திடீர் வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி 5 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் குவித்து இந்த நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.
சஞ்சு சாம்சனின் இந்த பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. அதோடு இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தார். அந்த வகையில் இந்த தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் அபிஷேக் சர்மாவை கடந்து ஒரு மாபெரும் சாதனையையும் டி20 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஒரு டி20 தொடரில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா 22 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 22 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் அடித்த 255 ரன்கள் மூலம் இந்திய அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
இவ்வேளையில் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் தான் விளையாடிய 5 ஆட்டங்களில் 24 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மாவை கடந்து ஒரு டி20 தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான பின் ஆலன் 25 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



