நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவின் தலைமையிலான இந்திய அணியானது ஏ பிரிவில் இடம் பெற்று முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்தது. அதனை தொடர்ந்து லீக் சுற்றில் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இன்று விளையாட காத்திருக்கிறது.
அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த : பேட்டிங் கோச்
இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிக திருப்திகரமாக அமைந்தாலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மாவின் ஆட்டம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த தொடரின் தற்போதைய நிலையில் 3 ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய அவர் இரண்டிலுமே டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார். இதன் காரணமாக அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
ஆனாலும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து சில ஆதரவும் அவருக்கு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அளித்த பேட்டி ஒன்றில் கடைசி இரண்டு ஆட்டங்களில் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி இருந்தாலும் அவரது திறமையின் மீது எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்றும் அவர் நிச்சயம் ரன் குவிப்பார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணிதான் இந்திய அணியுடன் மோதும் என்று பலரும் நினைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஜிம்பாவே அணி அவர்களை வீழ்த்தியதால் தற்போது நாம் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து சூப்பர் 8 சுற்றில் விளையாட இருக்கிறோம். அந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கும். அதே போன்று கடந்த சில நாட்களாகவே அபிஷேக் சர்மாவின் பார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க : நெதர்லாந்து அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் ஏற்படவுள்ள பல்வேறு மாற்றங்கள் – விவரம் இதோ
இந்த இரண்டு ஆட்டங்களால் அவரது திறமையை சந்தேகப்படக் கூடாது. அவர் அவருடைய திட்டங்களில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு எவ்வாறு விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடும்போது இதுபோன்ற சில ஆபத்துக்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அபிஷேக் ஷர்மா அதையெல்லாம் எளிதாக கடந்து வருவார் என பேட்டிங் பயிற்சியாளர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



