இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இரண்டாவது லீக் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்திய டி20 அணியின் துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் முதன்மை துவக்க வீரராக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சஞ்சு சாம்சனுக்கு மறுக்கப்பட இருக்கும் வாய்ப்பு :
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் இஷான் கிஷனுக்கு அபிஷேக் ஷர்மாவுடன் உலக கோப்பை தொடரில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை இஷான் கிஷன் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
இந்நிலையில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது உடல் நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா விளையாடாததால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் துவக்க வீரருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் மீண்டும் இழந்த இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் மீண்டும் ஒருமுறை அவரது இடம் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. அந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது என்று தெரிகிறது.
இதையும் படிங்க : வயிற்று உபாதையால் ஏற்பட்ட எடை இழப்பு.. அபிஷேக் சர்மா மீள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ
ஏனெனில் ஒருபுறம் இஷான் கிஷன் மிகச் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அபிஷேக் ஷர்மா மீண்டும் உடற்தகுதியை விட்டால் நிச்சயம் சஞ்சு சாம்சன் என்னதான் சிறப்பாக விளையாடினாலும் அவரது இடம் பறிக்கப்பட்டு அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்படும். அது மட்டுமின்றி இந்த உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளில் இருந்தும் சஞ்சு சாம்சன் கழட்டிவிட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.



