இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
இதேபோன்று தான் இனியும் விளையாடுவோம் : சூரியகுமார் யாதவ்
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 84 ரன்களையும், ரிங்கு சிங் 44 ரன்களையும் குவித்தனர். பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 78 ரன்களையும், சேப்மன் 39 ரன்களையும் குவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
முதலில் பேட்டிங் செய்யும்போது நிறைய ரன்கள் அடிக்க வேண்டும் என்பது எங்களுடைய மனநிலையாக இருந்தது. ஏனெனில் மைதானத்தில் டியூ இருக்கும் போது கூடுதலாக ரன்கள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வகையில் நாங்கள் அதிரடியாக விளையாடியதாக நினைக்கிறோம். குறிப்பாக பவர்பிளே ஓவரிலேயே நாங்கள் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்த 15 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடினோம்.
இதையும் படிங்க : 8 சிக்ஸ்.. பொல்லார்ட் சாதனை சமன்.. ரசல் சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா.. புதிய உலக சாதனை
எந்த இடத்திலும் எங்களது அதிரடியை கைவிடவில்லை. எட்டு பேட்டர் மற்றும் மூன்று ஸ்ட்ரைக் பவுலர் என இந்த காம்பினேஷன் உடனே நாங்கள் தொடர்வோம். எங்களது அணியின் சமநிலை தற்போது சரியாக இருப்பதாக நினைக்கிறேன். நிச்சயம் இதே அதிரடி இனி வரும் போட்டிகளிலும் தொடரும் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



