நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஜனவரி 21ஆம் தேதி துவங்கியது. நாக்பூரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா அதிரடியாக விளையாடி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 84 (25), கேப்டன் சூரியகுமார் யாதவ் 32 (22), ஹர்டிக் பாண்டியா 25 (16), ரிங்கு சிங் 44* (20) ரன்களை குவித்தார்கள். அடுத்து விளையாடிய நியூசிலாந்து முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 190/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 78, மார்க் சேப்மேன் 39 ரன்களை குவித்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
அபிஷேக் அசத்தல்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றியால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் 2026 டி20 உலகக்கோப்பைக்கும் இந்திய அணி தயாராகி வருகின்றது.
முன்னதாக இப்போட்டியில் இந்திய அணிக்காக அபிஷேக் ஷர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் நியூசிலாந்தை வெளுத்து வாங்கிய அவர் 12 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 84 (35) ரன்களை 240 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அந்த வகையில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதற்கு அடையாளமாக விளையாடிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம்.
2 அதிரடி சாதனை:
இதையும் சேர்த்து சர்வதேசம், உள்ளூர் மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து விதமான டி20 தொடர்களில் அபிஷேக் ஷர்மா 2898 பந்துகளில் 5000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 5000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. அபிஷேக் சர்மா (இந்தியா): 2895*
2. ஆண்ட்ரே ரசல் (வெஸ்ட் இண்டீஸ்): 2942
3. டிம் டேவிட் (ஆஸ்திரேலியா): 3117
4. வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து): 3196
5. கிளன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா): 3239
இதையும் படிங்க: பிளான் போட்டு அவுட்டாக்க வரும் எதிரணிகளை அடித்து.. இந்தியாவை ஜெய்க்க வைக்க இதான் காரணம்.. அபிஷேக் பேட்டி
அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு டி20 போட்டியில் 2வது அதிக (8) சிக்ஸர்கள் அடித்த வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2020ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ்க்காக பொல்லார்ட்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2012 ஹமில்டன் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.



