இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. இரவு 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிரடி காட்ட முயற்சித்த சஞ்சு சாம்சன் 10 (7) ரன்களில் அவுட்டானர். மறுபுறம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். எதிர்ப்புறம் நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவுக்காக களமிறங்கிய இசான் கிசான் 8 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
அபிஷேக், ரிங்கு மிரட்டல்:
இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடியைக் குறைக்காத அபிஷேக் சர்மா 22 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 99 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 32 (22) ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் தொடர்ந்து நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 84 (35) ரன்களை 240 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி சென்றார். மிடில் ஆடரில் சிவம் துபே 9 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 25 (16) ரன்கள் எடுத்து ரன்ரேட்டை சரிய விடாமல் தடுத்தார்.
இந்தியா சாதனை ஸ்கோர்:
அடுத்ததாக வந்த அக்சர் பட்டேல் 5 (5) ரன்னில் அவுட்டாகி சென்றார். ஆனால் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் டெத் ஓவர்களில் நியூஸிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி 3 பவுண்டரி 3 சிக்சருடன் 40* (19) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அவருடன் அர்ஷ்தீப் சிங் 6* (6) ரன்களை எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 238/7 ரன்கள் குவித்து அசத்தியது.
இதையும் படிங்க: கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை கடந்து நியூசி அணிக்கு எதிராக அசத்தல் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா
இதன் வாயிலாக நியூசிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 234/4 ரன்களை அடித்ததே முந்தைய சாதனை. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி, கெய்ல ஜெமிசன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


