இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தவுள்ள சாதனை :
இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 74 ஆட்டங்களில் பங்கேற்று 68 இன்னிங்ஸ்களில் விளையாடி 47 ரன்கள் சராசரியுடன் 2966 ரன்கள் குவித்துள்ளார். அதனால் மேலும் 34 ரன்களை இந்த போட்டியில் அவர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒர நாள் போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்வார்.
அதிலும் குறிப்பாக அவர் இன்றைய போட்டியில் 34 ரன்கள் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் மற்றும் தற்போதைய நட்சத்திர வீரரான விராட் கோலியை முந்தவும் வாய்ப்புள்ளது. இன்றைய போட்டி ஷ்ரேயாஸ் ஐயருக்கு 69-ஆவது இன்னிங்ஸ்சாக அமைய இருக்கும் வேளையில் இன்றைய போட்டியிலேயே அவர் 34 ரன்களை அடிக்கும் பட்சத்தில் அதிவேகமாக 3000 ரன்களை அடித்த இந்திய வீரராக சாதனை நிகழ்த்துவார்.
இவருக்கு முன்னதாக ஷிகர் தவான் தனது 72-வது இன்னிங்சில் 3000 ரன்களை அடித்ததே இந்திய வீரர் சார்பாக அடிக்கப்பட்ட அதிவேக 3000 ரன்களாக இருந்தது. அவருக்கு அடுத்து விராட் கோலி 75 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்திருந்தார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சனை வாங்க காரணமே இந்த ஒரு விடயம் தான் – ஹனுமா விஹாரி கருத்து
இந்நிலையில் அவர்களது இந்த சாதனையை முறியடிக்க இன்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. அதேபோன்று இந்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் உலக அளவில் நான்காவது அதிவேக வீரராக இந்த சாதனையை விவ் ரிச்சர்ட்ஸ் உடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.



