இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக முதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் போது காலில் சந்தித்த காயததால் எஞ்சிய போட்டிகளில் விலகினார்.
அதனால் எஞ்சிய போட்டிகளில் ஆயுஷ் படோனி முதல் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் படோனி 1000 ரன்கள் கூட அடிக்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதே போல பந்து வீச்சிலும் அவர் 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்ததில்லை.
படோனிக்கு பதில்:
எனவே உள்ளூர் கிரிக்கெட்டிலேயே போதுமான அனுபவமில்லாத அவருக்கு பதில் ரியன் பராக் அல்லது ரிங்கு சிங்கை தேர்ந்தெடுத்திருக்கலாமே? என்று ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தர் இல்லாததால் ஆயுஷ் படோனி வந்துள்ளார். தேர்வுக்குழு சுந்தரை போன்ற வீரரை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்தியா ஏ அணிக்காக படோனி நிறைய பேட்டிங், பவுலிங் செய்துள்ளார்”
“டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் அவர் நல்ல எக்கனாமியில் பந்து வீசியுள்ளார். எனவே தேர்வுக்குழு அவரை தேர்ந்தெடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 1000 ரன்கள் கூட அடித்ததில்லை. அதே போல நிறைய விக்கெட்டுகளும் எடுத்ததில்லை. இருப்பினும் அவர் கதவை உடைத்து கொண்டு வந்துள்ளார் என்று நீங்கள் சொல்வீர்கள்”
ஆகாஷ் சோப்ரா அதிருப்தி:
“இப்படிப்பட்ட தேர்வை பார்க்கும் போது நீங்கள் ஏன் ரியான் பராக் அல்லது ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று ஆச்சரியப்படுவீர்கள். ரியான் பராக் காயத்திலிருந்து மீண்டும் வந்துள்ளார். அதே போல பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரிங்கு சிங் இப்போதெல்லாம் பந்து வீச்சில் நிறைய பந்துகளை போடுகிறார். அவரை நீங்கள் அவ்வப்போது பவுலிங் செய்யும் பேட்ஸ்மேனாக கருத்தில் கொள்ளலாம்”
இதையும் படிங்க: 34 ரன்ஸ்.. தவான், கோலியின் சாதனையை உடைக்கப்போகும் ஸ்ரேயாஸ்.. ரிச்சர்ட்ஸை சமன் செய்யவும் வாய்ப்பு
“இருப்பினும் ஆயுஷ் படோனியை காட்டிலும் சிறந்த தேர்வு இல்லை என்பது போல் தேர்வாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். அந்த கோணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? எனக்கு தெரிந்த வரை ஒருநாள் போட்டியில் 8 முதல் 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு அவர் நல்ல வீரர் கிடையாது. அதனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறினார்.



