நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 49 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்படி இந்திய அணி பெற்ற இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
விராட் கோலியின் உழைப்பை பாராட்டிய : கேப்டன் கில்
இந்த போட்டியின் போது இந்திய அணி சேசிங் செய்கையில் துவக்க வீரரான ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியதும் களத்திற்குள் வந்த விராட் கோலி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதிலும் குறிப்பாக சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த போதிலும் அவரை தாண்டி வேகமாக அரைசதம் அடித்து அசத்தினார்.
பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதத்தை நெருங்கிய வேளையில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இந்த போட்டியில் அவர் சதத்தை தவற விட்டிருந்தாலும் அவரது இந்த பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. நேற்றைய போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற விராட் கோலி அவரது பேட்டிங் குறித்து பேசுகையில் :
நான் தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிப்பதில்லை. தற்போது அதிரடியாக விளையாடுவதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்திருந்தால் இதைவிட அதிரடியாக விளையாடி இருப்பேன் என்றும் நான் நினைத்ததற்கு மேல் கடவுள் எனக்கு கிரிக்கெட்டில் அனைத்தையும் கொடுத்துவிட்டார். எனவே அதற்கு நன்றி உள்ளனாகவும் இருக்க விரும்புவதாக விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் அற்புதமான ஆட்டம் குறித்து பாராட்டி பேசியிருந்த கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : விராட் கோலி எப்போதுமே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியை தனக்குள் வைத்திருக்கிறார். அதேபோன்று களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை எந்த எல்லைக்கும் கொண்டு செல்ல தயங்காமல் உழைத்து வருகிறார். அவருடைய கடின உழைப்பை அருகில் இருந்து நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
இதையும் படிங்க : ரொம்ப ஈஸியா லோக்கல் மேட்ச்ல ஆடுற மாதிரி ஆடுறாரு.. விராட் கோலியை பாராட்டிய – முகமது கைப்
குறிப்பாக பேட்டிங் பயிற்சிகளை தவிர்த்து அவர் காலையில் வந்ததும் கேட்ச் பிடிப்பதற்கு பல பயிற்சிகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பரிடம் சரியாக த்ரோ அடிக்க வேண்டும் என்றும் மைதான எல்லைகளிலிருந்து பயிற்சி மேற்கொள்கிறார். இப்படி பேட்டிங்கை தவிர்த்து மைதானத்தில் பீல்டிங்கிலும் தன்னால் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் உழைப்பது மிகப்பெரிய விடயம் என சுப்மன் கில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



