25/5 டூ 249/7.. 15 சதம்.. தனியாளாக தூக்கிய ருதுராஜ் வரலாற்று சாதனை சமன்.. தேர்வுக்குழுவுக்கு பதிலடி

Ruturaj gaikwad
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025/26 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 8ஆம் தேதி எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் கோவா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு பிரிதிவி ஷா 1, அர்சின் குல்கரனி 0, அன்கித் பாவ்னே 0, சித்தார்த் மாத்ரே 3, சௌரப் நாவலே 5 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 25/5 என சரிந்த மகாராஷ்டிரா 150 ரன்கள் தான்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அபார சதம்:

எதிர்ப்புறம் வந்த ராமகிருஷ்ணா கோஸ் 14 ரன்னில் அவுட்டானதால் 52/6 என மீண்டும் மகாராஷ்டிரா தடுமாறியது. இருப்பினும் அடுத்து வந்த விக்கி ஓஸ்த்வால் நங்கூரமாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய ருதுராஜ் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய விக்கி அரை சதமடித்து 53 ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் செட்டிலான பின் அதிரடியை துவங்கிய ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே கோப்பையில் தன்னுடைய 15வது சதத்தை அடித்தார். இதன் வாயிலாக விஜய் ஹசாரே கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ருதுராஜ் கெய்க்வாட் (மகாராஷ்டிரா): 15*
1. அன்கிட் பாவ்னே (மகாராஷ்டிரா): 15
2. தேவ்தூத் படிக்கல் (கர்நாடகா): 13
2. மயங் அகர்வால் (கர்நாடகா): 13

- Advertisement -

வரலாற்று சாதனை:

சொல்லப்போனால் 94 இன்னிங்ஸில் பாவ்னே அடித்த 15 சதங்களை ருதுராஜ் வெறும் 59 இன்னிங்ஸிலேயே தொட்டுள்ளார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் இப்போட்டியில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 134* (131) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 32* (19) ரன்களை எடுத்ததால் மகாராஷ்டிரா 50 ஓவரில் 249/7 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: சுப்மன் கில் சொதப்பலால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் வாய்ப்பு – விவரம் இதோ

கோவா அணிக்கு அதிகப்பட்சமாக வாசுகி கௌஷிக் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இப்படி தொடர்ச்சியாக அசத்தி வரும் ருதுராஜ் நீண்ட காலம் கழித்து கடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த அவருக்கு அடுத்து நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அபாரமான சதத்தை அடித்த ருதுராஜ் தன்னை கழற்றி விட்ட தேர்வுக் குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement