அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அணியில் சூரியகுமார் யாதவின் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. இந்தப் பட்டியல் வெளியானதில் இருந்தே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது.
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனால் அதிரடியாக ஆட முடியும் : சிறுவயது கோச்
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக சஞ்சு சாம்சனே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இஷான் கிஷன் சாம்சனுக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதனால் இஷான் கிஷனுக்கு இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அப்படி கிடைத்தால் இஷான் கிஷன் என்ன செய்வார்? என்பது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளரான உத்தம் முசும்தார் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் நிர்வாகம் நிச்சயம் இஷான் கிஷனை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் பவர்பிளே ஓவர்களின் போது அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் இருந்தால் இந்திய அணி இன்னும் அதிரடியான துவக்கத்தை பெறும். இஷான் கிருனால் மிடில் ஆடரிலும் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் மிடில் ஆர்டரை விட துவக்க வீரராக அவர் மிகச் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் கடந்த சில சீசன்களாகவே அவர் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரராகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதுமட்டும் இன்றி சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அவர் துவக்க வீரராக சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடுவதை விட அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் இணைந்து விளையாட வேண்டும் என்றும் அப்படி விளையாடினால் சஞ்சு சாம்சனை காட்டிலும் கூடுதலான அதிரடியான துவக்கத்தை இஷான் கிஷனால் அளிக்க முடியும் என்றும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கஷ்டமா இருந்தாலும் அவங்க 2 பேரையும் நீக்கியது சரிதான்.. இந்திய அணி செம ஸ்ட்ராங் – ராபின் உத்தப்பா கருத்து
நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 517 ரன்களை குவித்த இஷான் கிஷன் 33 சிக்சர்களையும் அடித்து அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 33 பந்துகளில் அவர் 100 ரன்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



