மட்டமான தரம்.. பணக்கார வாரியம்ன்னு வெளியே சொல்லாதீங்க.. பிசிசிஐயை விளாசும் ரோஹித், கோலி ரசிகர்கள்

Vijay Hazare Trophy
- Advertisement -

இந்தியாவில் விஜய் ஹசாரே 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி பல்வேறு நகரங்களில் துவங்கியது. அந்தத் தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களது மாநில அணிகளுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடுகிறார்கள். அதனால் அப்போட்டிகளைக் காண்பதற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.

அந்த சூழ்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடர் ஸ்டார்ஸ்போர்ட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் வாயிலாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் டெல்லி அணி தங்களது முதல் 2 போட்டிகளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

மட்டமான தரம்:

அதனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் விராட் கோலிக்கு அமோக வரவேற்பு கொடுத்து ஆதரவளிக்க பெங்களூரு ரசிகர்கள் தயாரானார்கள். ஆனால் கடைசி நேரத்தில் விஜய் ஹசார கோப்பை தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படாது என்று பிசிசிஐ அறிவித்தது. அதே போல் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த டெல்லி அணியின் போட்டிகள் அருகிலுள்ள என்சிஏ மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் காரணமாக பெங்களூருவில் விராட் கோலி ஆட்டத்தைப் பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தார்கள். அந்த நிலையில் சிக்கிமுக்கு எதிராக விளையாடிய மும்பை அணிக்கு அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்து 155 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அதே போல ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலி 131 ரன்கள் குவித்து டெல்லியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பணக்கார வாரியம்ன்னு சொல்லாதீங்க:

இருப்பினும் பல வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி சதமடித்த அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். கடைசியில் அவர்களுடைய ஆட்டத்தைப் பற்றிய ஓரிரு நிமிட ஹைலைட் வீடியோவை பிசிசிஐ தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவும் மட்டமான தரத்தில் இருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் அடுத்த பயிற்சியாளராக.. இந்தியாவை சேர்ந்த அவரை போடுங்க.. பனேசர் பேட்டி

அதனால் கடுப்பான இந்திய ரசிகர்கள் உலகிலேயே மிகவும் பணக்கார வாரியம் என்று வெளியே சொல்லிக் கொள்ளாதீர்கள் என பிசிசிஐயை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு வாரியங்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளை கூட உயர்தரத்தில் நேரலையில் ஒளிபரப்புகின்றன. மேலும் போட்டி முடிந்ததும் அதன் ஹைலைட் வீடியோக்களை யூடியூபில் உயர்தரத்தில் பதிவிடுகின்றன. அவர்களைப் பார்த்து பிசிசிஐ கற்றுக்கொள்ள வேண்டுமென இந்திய ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement