299 சேசிங்கில் 131 ரன்ஸ்.. சச்சினுக்கு பின் மாபெரும் சாதனை படைத்த கிங் கோலி.. டெல்லி எளிதான வெற்றி

Virat Kohli 2
- Advertisement -

விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் துவங்கியது. அந்தத் தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் ஆந்திரப்பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அந்தப் போட்டியில் சுமார் 12 வருடங்கள் கழித்து டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடியது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரப்பிரதேசம் 50 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 298/8 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிக்கி புய் சதமடித்து 122 (105) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

கிங் கோலி அசத்தல்:

டெல்லி அணிக்கு அதிகபட்சமாக பிரின்ஸ் யாதவ் 3, சிமர்ஜித் சிங் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 299 ரன்களை துரத்திய டெல்லி அணிக்கு அர்பித் ராணா ஆரம்பத்திலேயே டக் அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா அரை சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த அவர் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 74 (44) ரன்களை குவித்து அவுட்டானார். அவருக்கு பின் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 39 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

சச்சினுக்கு பின் சாதனை:

அடுத்து வந்த நிதீஷ் ராணா தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடி டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் கைகோர்த்த விராட் கோலி சிறப்பாக விளையாடி 89 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து கிளாஸ் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 131 (101) ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தம்மைக் கழற்றி விட துடிக்கும் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 18 ஃபோர்ஸ் 9 சிக்ஸ் 155 ரன்ஸ்.. 62 பந்தில் 38 வயதில் நம்பர் ஒன்னை காட்டிய ஹிட்மேன் ரோஹித்.. மும்பை அசத்தல் வெற்றி

இறுதியில் நித்திஷ் ராணா அரை சதமடித்து 77 (55), கேப்டன் ரிசப் பண்ட் 5 (6) ரன்கள் எடுத்ததால் 37.4 ஓவரிலேயே 300/6 ரன்களை குவித்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் 16000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 21999 (538 இன்னிங்ஸ்)
2. விராட் கோலி: 16130* (330 இன்னிங்ஸ்)

Advertisement