தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் 3 போட்டிகள் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து நான்காவது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் துணை கேப்டனாக விளையாடி வரும் சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சங் விளையாட வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுமாராக விளையாடிய அவரை ஏற்கனவே இந்திய அணி கழற்றி விட்டது. அதற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் 3 சதங்கள் அடித்து ஒரு வழியாக இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்தார்.
நேரம் வந்தாச்சு:
ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழு ஓப்பனிங்கில் விளையாட வைத்துள்ளது. அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடி வரும் கில் கடைசியாக விளையாடிய 17 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் அசத்திய சாம்சன் இத்தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு ஜிதேஷ் சர்மா கீப்பராக விளையாடிக வருகிறார்.
இந்நிலையில் 2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால் சுப்மன் கில்லை அணியிலிருந்து கழற்றி விடும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த விரும்பினால் கில்லை அணியிலிருந்து நீக்கி விட்டோம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்”
நீக்காம கழற்றி விடுங்க:
“மாறாக அவருக்கு தற்காலிகமாக இடைவெளி கொடுத்துள்ளோம் அல்லது வேறொரு வீரரை முயற்சி செய்கிறோம் என்று சொல்லுங்கள். எப்படியாக இருந்தாலும் அடுத்த 2 போட்டிகளில் புதிய வீரர் விளையாட வைக்க வேண்டும். அந்த வீரர் யாராக இருந்தாலும் வாய்ப்புக்கு தகுதியானவராக இருக்க வேண்டும். குறிப்பாக வருடம் முழுவதும் கில் விளையாடும் நிலையில், 2 – 3 போட்டிகளில் சுமாராக விளையாடியதால் என்னை நீக்கி விட்டார்கள் என்று அந்த வீரர் அவர் நினைத்துக் கொண்டிருப்பார்”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 4வது டி20 நடக்கும் லக்னோ வாஜ்பாய் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“அந்த வீரர் தான் சஞ்சு சாம்சன். பொதுவாக இந்திய அணியில் துருப்புச்சீட்டைப் போன்ற ஓரிரு வீரர்கள் சுமாராக விளையாடினாலும் சிறப்பு வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். ஆனால் சுப்மன் கில் ஏற்கனவே ஏராளமான வாய்ப்புகளை பெற்று விட்டார். அவரைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. நீண்ட காலமாக பேசி வருகிறோம். எனவே நீங்கள் சரியான முடிவை எடுப்பதற்கான நேரம் வந்து விட்டது” என்று கூறினார்.



