இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய சுப்மன் கில் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறினார். அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனுக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அபிஷேக் ஷர்மா நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்தி வருகிறார்.
காத்திருக்கும் சாம்சன்:
அதே போல 3 சதங்களை அடித்த சாம்சன் ஒரு வழியாக இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார். ஆனால் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைக்கும் இந்திய அணி அவரை ஓப்பனிங்கில் விளையாட வைத்துள்ளது. இருப்பினும் அந்த வாய்ப்பில் இதுவரை அசத்தாத கில் கடைசி 17 டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை.
மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் அசத்திய சாம்சனை இத்தொடரில் மொத்தமாக கழற்றி விட்டுள்ள இந்திய அணி கீப்பராக ஜித்தேஷ் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் சாம்சன் போட்டிக்கு காத்திருப்பதால் இனிமேலும் சுப்மன் கில் ரன்கள் குவிக்காவிட்டால் 2026 டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பிடிப்பது கடினம் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பத்தான் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கில்லுக்கு நெருக்கடி:
“கில் முக்கிய தலைப்பாக இருக்கிறார். உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் துணைக் கேப்டனாக சுமாரான ஃபார்மில் இருக்கும் அவரிடமிருந்து ரன்கள் வரவில்லை. டி20 அணியில் அவர் தன்னுடைய இடத்தைப் பிடிக்க ரன்கள் அடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இன்னும் அழுத்தத்தை சந்திப்பார். ஏனெனில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். ஒருவேளை சாம்சனும் அணிக்குள் வந்து ரன்கள் அடிக்க தடுமாறினால் இந்தியாவுக்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படும்”
இதையும் படிங்க: சிஎஸ்கே அணி கேமரூன் க்ரீனை 20 கோடிக்கு மல்லுக்கட்டி வாங்க மாட்டாங்க.. இதான் 2 காரணம்.. ஆகாஷ் சோப்ரா
“ஒருவேளை சுப்மன் கில்லை இந்தியா உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கு அவர் ரன்கள் அடிப்பது முக்கியம். இல்லையென்றால் அது இந்திய அணிக்கே வலியைக் கொடுத்து விடும். அது துணைக் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருக்கும் அவருக்கும் அழுத்தத்தை உண்டாக்கும். அதே சமயம் வாய்ப்பு கிடைத்ததும் அசத்துவதற்கு சாம்சன் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை நமக்கு போட்டியாக மற்றொருவர் காத்திருக்கிறார் என்று சுப்மன் நினைத்தால் அசத்த முடியாது” எனக் கூறினார்.



