தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்கையில் பந்தை ஸ்வீப் செய்யும் போது கழுத்து வலி காரணமாக மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அவர் களத்திற்கு திரும்பவில்லை. அந்த அளவிற்கு அவருடைய கழுத்து வலி மிகப்பெரிய பாதிப்பை அவருக்கு உண்டாக்கி இருந்தது.
இப்போ நான் ரொம்ப நல்லா இருக்கேன் : சுப்மன் கில்
அதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு சிகிச்சையும், பயிற்சியையும் மேற்கொண்டார். அதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
பின்னர் பெங்களூரிலேயே சில வாரங்கள் இருந்த அவர் தற்போது தனது சிகிச்சையையும், பயிற்சியையும் முழுவதுமாக முடித்துக் கொண்டு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கும் அவர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.
அதனால் ரன் குவிக்கும் வேட்கையுடன் இருப்பதாகவும் நிச்சயம் இந்த டி20 தொடரில் அவர் ரன்களை குவிக்க ஆர்வமாக காத்திருக்கிறார் என்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து தான் மீண்டு வந்தது குறித்து பேசியுள்ள இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது நான் காயத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். நான் கட்டாக் நகருக்கு வந்ததிலிருந்து தற்போது வரை மிகச் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறேன். என்னுடைய வலைப்பயிற்சியில் நல்ல முன்னேற்றமும் அடைந்துள்ளேன். தற்போதைய நிலையில் நான் மிகச் சிறப்பாக உணர்வதால் நிச்சயம் இந்த டி20 தொடரில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க : 2025 ஆம் ஆண்டிற்கான டாப் வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்த இருக்கும் அசத்தல் சாதனை – விவரம் இதோ
ஏற்கனவே துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டருக்கு தள்ளிவிட்டு சுப்மன் கில் தற்போது துவக்க வீரராக விளையாடி வருவதால் அவர் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அவரிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



