தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது. 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைப் பார்த்த இந்திய கேப்டன் கேஎல் ராகுல் முகம் நிறைய புன்னகையை வெளிப்படுத்தினார். அதே போல மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களும் ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் கடைசியாக இந்தியா 2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் டாஸ் வென்றது.
2 வருடம் 20 போட்டிகள்:
அதன் பின் கடந்த 2 வருடங்களாக நடைபெற்ற 20 தொடர்ச்சியான போட்டிகளில் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோற்ற அணி என்ற பரிதாபமான உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அந்த மோசமான உலக சாதனை ஒரு வழியாக இப்போட்டியில் நிறைவுக்கு வந்தது.
அந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் கழற்றி விடப்பட்டு திலக் வர்மா விளையாடுவதாக கேப்டன் ராகுல் அறிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். நேற்றிரவு இங்கே பனி இருந்த சூழ்நிலைகளில் நாங்கள் பயிற்சிகளை எடுத்து எங்கள் பயிற்சியாளர்களிடம் தேவையான ஆலோசனைகளை பெற்றோம். எங்களுடைய ரெக்கார்டை மனதில் வைத்து நாங்கள் இரண்டாவதாக பந்து வீச தயாராகவே இருந்தோம்”
இந்தியா டாஸ் வெற்றி:
“கடந்த 2 போட்டிகளைப் போல இன்று பனி மிகவும் விளையாடும் என்று எனக்குத் தோன்றவில்லை. நாங்கள் முதலில் எப்படி பந்து வீசுகிறோம் என்பதைப் பார்த்து இலக்கைத் துரத்த விரும்புகிறோம். பிட்ச் நன்றாகத் தெரிகிறது. கடந்த 2 போட்டிகளில் நாங்கள் விளையாடியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 360 ரன்களை எதிரணி சேசிங் செய்ததை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தவறு போல் தெரியும்”
இதையும் படிங்க: 0 டூ 202 ரன்ஸ்.. வெ.இ வீரர் க்ரிவ்ஸ் இரட்டை உலக சாதனை.. பென் ஸ்டோக்ஸை முந்தி வரலாறு
“ஆனால் சூழ்நிலை மற்றும் எங்கள் அணியைப் பார்க்கையில் நாங்கள் நன்றாகவே விளையாடியதாக நினைக்கிறேன். பேட்டிங், பவுலிங் துறைகளில் எங்கள் அணி நன்றாக விளையாடியதில் நேர்மறை விஷயங்களை எடுத்துக் கொண்டோம். எங்களுடைய செயல்முறைகளில் நின்றால் வெற்றி வரும் என்பது எங்களுக்குத் தெரியும். எதையும் அதிகம் மாற்ற விரும்பாத நாங்கள் களத்தில் சில விஷயங்களை கூர்மைப்படுத்தினால் வெற்றி தாமாக வரும். சுந்தருக்கு பதிலாக திலக் வருவது ஒரு மாற்றம்” என்று கூறினார்.



