இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரினை தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்திய அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி : தெம்பா பவுமா
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்களையும், விராட் கோலி 102 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக எய்டன் மார்க்கம் 110 ரன்களையும், பிரிட்ஸ்கீ 68 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியில் பந்து வீச்சின் போது நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்த வேளையில் எங்களது பந்துவீச்சாளர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.
அதே போன்று பேட்டிங்கிலும் டாப் 3 வீரர்கள் அற்புதமாக விளையாடி சேசிங்கிற்கு உதவினர். கடைசி நேரத்தில் கார்பின் போஷ் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இந்தியாவில் இந்திய அணியை எதிர்த்து பெரிய சேசிங்கில் சாதனை வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : 195 ரன்ஸ்.. டிகே – சச்சினின் 15 வருட சாதனையை.. விராட் கோலியுடன் சேர்ந்து உடைத்த ருதுராஜ்
எங்களது அணியின் வீரர்கள் இறுதிவரை வெற்றிபெற முடியும் என்று நினைத்தே ஆடினார்கள். இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் அமைத்த நல்ல பாட்னர்ஷிப் தான் போட்டியை எங்கள் வசம் கொண்டு வந்தது என்றும் தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.



