195 ரன்ஸ்.. டிகே – சச்சினின் 15 வருட சாதனையை.. விராட் கோலியுடன் சேர்ந்து உடைத்த ருதுராஜ்

Ruturaj Kohli 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கேப்டன் ராகுல் 66 ரன்கள் குவித்து சதத்தை அடித்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 49.2 ஓவரில் 362/6 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் சதமடித்து 110, கேப்டன் தெம்பா பவுமா 46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அதனால் இத்தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ருதுராஜ் – விராட் கோலி ஜோடி:

முன்னதாக அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி – ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்தார்கள். அதில் தமக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய முதல் சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அசத்திய விராட் கோலி தம்முடைய 53வது சதத்தை அடித்து சில சாதனைகளைப் படைத்தார்.

அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியா 358 ரன்களை குவிப்பதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்தது என்றே சொல்லலாம். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை ருதுராஜ் – விராட் கோலி படைத்துள்ளனர்.

- Advertisement -

15 வருட சாதனை தகர்ப்பு:

இதற்கு முன் 2010ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 194 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை. அந்தப் போட்டியில் தான் சச்சின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்ததை மறக்க முடியாது. தற்போது அந்த ஜோடியின் 15 வருட சாதனையை விராட் கோலியுடன் சேர்ந்து ருதுராஜ் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க:விராட் கோலி தான் எனக்கு சதமடிக்க இந்த ஹெல்ப் பண்ணாரு.. அவரோட என் கனவு நிஜமாகிருக்கு.. ருதுராஜ் பேட்டி

இருப்பினும் அவர்களுடைய சதத்தை வீணடிக்கும் வகையில் இந்திய பவுலர்கள் சுமாராக பந்து வீசி தோல்விக்கு காரணமாக அமைந்தார்கள். இதைத் தொடர்ந்து கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து இந்தியா தொடரை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement