தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கேப்டன் ராகுல் 66 ரன்கள் குவித்து சதத்தை அடித்து அசத்தினார்கள்.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பித்து 49.2 ஓவரில் 362/6 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் சதமடித்து 110, கேப்டன் தெம்பா பவுமா 46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அதனால் இத்தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து ஆஸ்திரேலியாவின் உலக சாதனையையும் சமன் செய்தது.
விராட் கோலியின் உதவி:
மறுபுறம் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தும் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் ருதுராஜ் சதத்தை அடித்தது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அமைந்தது. ஏனெனில் திறமையான அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இருப்பினும் மனம் தளராத அவர் இப்போட்டியில் கிடைத்த வாய்ப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து தம்முடைய திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற தமது கனவு நிஜமானதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இடைவெளிகளைக் கண்டறிந்து ரன்கள் குவிப்பதற்கு தேவையான ஆலோசனைகளைக் கொடுத்த விராட் கோலி தனது முதல் சதத்தை அடிக்க உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனவு நிஜமான தருணம்:
இது பற்றி ருதுராஜ் பேசியது பின்வருமாறு. “கடந்தப் போட்டியில் சூழ்நிலைகள் எனக்கு சாதகமாக இருந்தும் துரதிஷ்டவசமாக பெரிய இன்னிங்ஸை தவற விட்டேன். ஆனால் இன்றைய ஆட்டத்தில் இருந்த சூழ்நிலைகள் எனக்கு இன்னும் அதிக பொருத்தமாக இருந்தது. ஏனெனில் நான் 11வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தேன். 25 – 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்ற வேண்டுமென எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்”
இதையும் படிங்க: பவுலர்களை குறை சொல்ல முடியாது.. 358 அடிச்சும் இந்தியா தோற்க இதான் காரணம்.. கேப்டன் ராகுல் பேட்டி
“15 – 20 ஓவர்கள் வரை கொஞ்சம் இருதலைப்பட்சமாக இருந்த பிட்ச் அதன் பின் எளிதாக மாறியது. விராட் கோலியுடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது கனவாகும். நாங்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தோம். எந்த பவுலரை, எந்த லென்த்தை குறி வைத்து, எப்படி இடைவெளிகளைக் கண்டறிந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய விஷயங்களை அவர் எனக்கு ஆட்டம் முழுக்க சொன்னார். நாங்கள் சிறுசிறு இலக்கை நிர்ணயித்து விளையாடினோம்” என்று கூறினார்.



