ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன் படி வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அத்தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் லட்சியத்துடன் விளையாட உள்ளது.
அந்த உலகக் கோப்பையின் பிராண்ட் அம்பாசிடராக ஐசிசி இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை நியமித்துள்ளது. 2007 – 2024 வரை வரலாற்றில் நடைபெற்ற 9 டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய ஒரே இந்திய வீரராக ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை சாதாரண வீரராக வென்ற அவர் 2024 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.
ஹிட்மேனுக்கு கெளரவம்:
அப்படிப்பட்ட ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதனால் சச்சின் டெண்டுல்கருக்கு (2011) பின் விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஐசிசி தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்ட இந்திய வீரர் என்ற கௌரவத்தை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்வதற்கான திறமை இந்திய அணியிடம் இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அதை இம்முறை தாம் தொலைக்காட்சியில் பார்ப்பேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கே இருப்பது சிறந்த கௌரவம். அதற்காக ஐசிசி தலைவர் ஜெய் ஷா அவர்களுக்கு நன்றி. விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் யாரும் ஐசிசி தொடரின் அம்பாசிடராக நியமிக்கப்பட மாட்டார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட யாருக்கும் கிடைக்காத பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது கௌரவமாகும்”
இந்தியா வெல்லும்:
“இம்முறை வித்தியாசமான திறமையுடைய வீரர்கள் இருப்பதால் மீண்டும் இந்தியா கோப்பையை வென்று மேஜிக் நிகழ்த்தும் என்று நம்பலாம். ஐசிசி கோப்பை வெல்வது கடினம் என்பதை தனிப்பட்ட முறையில் நான் பார்த்துள்ளேன். என்னுடைய 18 வருட சர்வதேச கேரியரின் ஆரம்பத்தில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற நான் சமீபத்தில் 2 வென்றேன். அதற்கிடையில் நீண்ட இடைவெளியில் கோப்பையை வெல்ல முடியவில்லை”
இதையும் படிங்க: சாரி கோச் சுக்ரி.. நீங்க இந்தியாவை இப்படி அவமரியாதையா பேசியிருக்கக் கூடாது.. ஸ்டைன் சாடல்
“அதற்காக பசியுடன் காத்திருந்த நாங்கள் ஒரு வழியாக 2 கோப்பைகளை (2024, 2025) வென்றது நன்றாக இருந்தது. இதுக்கு முந்தைய உலகக் கோப்பைகளில் விளையாடிய நான் தற்போது அதை வெளியிலிருந்து பார்ப்பேன். இப்போதும் நான் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் இந்தியாவின் போட்டிகளை பார்ப்பேன். இப்போதும் கிரிக்கெட்டில் விளையாடும் நான் விரைவில் இந்திய அணியை சந்திப்பேன்” என்று கூறினார்.



