இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2 ஆவது சர்வதேச வீரராக ஜடேஜா நிகழ்த்திய சாதனை :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களையும் குவித்தனர். பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தற்போது தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்ங்னிசை விளையாடி வருகிறது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.
அதனால் 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையுடன் 3 ஆம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. நிச்சயம் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்த போட்டி முடிவுக்கு வரும் என்றும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் குவித்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 13 ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி அவர் இரண்டாவது இன்னிங்சில் எடுத்த 4 விக்கெட்டுகளின் மூலம் தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஸ்டூவர்ட் பிராடுக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே இந்திய மண்ணில் 2000-திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள ரவீந்திர ஜடேஜா இன்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? 3 பந்தோடு மைதானத்தில் இருந்து வெளியேறியது ஏன்? – பி.சி.சி.ஐ விளக்கம்
இப்படி சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 2000-திற்கும் மேற்பட்ட ரன்களையும், 250-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரராக ஸ்டூவர்ட் பிராடு மட்டுமே இருந்து வந்த வேளையில் தற்போது ஜடேஜாவும் சொந்த மண்ணில் 2000-திற்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரராக ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



