பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலைப் பெற்ற அத்தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி பைசாலாபாத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு டிரே பிரிட்டோரியஸ் 39, குவிண்டன் டீ காக் 53 ரன்கள் எடுத்தனர். அதனால் 87/1 என்ற வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவை அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வெறும் 143 ரன்களுக்கு சுருட்டியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
குவிண்டன் டீ காக் கம்பேக்:
அடுத்து விளையாடிய பாகிஸ்தானை சாய்ம் ஆயுப் 77, முகமது ரிஸ்வான் 32*, பாபர் அசாம் 27 ரன்கள் அடித்து 25.1 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் தங்களது சொந்த மண்ணில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை படைத்தது. மறுபுறம் தென்னாபிரிக்கா போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.
இருப்பினும் அப்போட்டியில் அடித்த 53 ரன்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் குவிண்டன் டீ காக் 158 இன்னிங்ஸில் 7000 ரன்களை கடந்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை 2வது வேகமாக அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஹாசிம் அம்லா: 150
2. குவிண்டன் டீ காக்: 158*
3. கேன் வில்லியம்சன்: 159
4. விராட் கோலி: 161
5. ஏபி டீ வில்லியர்ஸ்: 168
தோனியின் சாதனை சமன்:
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சில வருடங்களுக்கு முன் டீ காக் திடீரென ஓய்வை அறிவித்தார். இருப்பினும் தற்போது மனதை மாற்றிக் கொண்ட அவர் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். அப்படி மீண்டும் களமிறங்கிய இந்த முதல் தொடரிலேயே அவர் 63, 123*, 53 என மொத்தம் 239 ரன்கள் குவித்து அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 88/8 டூ 168.. உலக சாதனை பார்ட்னர்ஷிப் போட்டு வெறித்தனமான போராடி வீழ்ந்த வெ.இ.. நியூஸிலாந்து த்ரில் வெற்றி
அதனால் தென்னாப்பிரிக்கா தோற்ற போதிலும் இத்தொடரின் தொடர்நாயகனாக டீ காக் தேர்வு செய்யப்பட்டார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 7 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக (இருவரும் தலா 7) முறை தொடர்நாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற இந்தியாவின் எம்எஸ் தோனி உலக சாதனையை டீ காக் சமன் செய்துள்ளார்.



