119க்கு அவுட்.. ஆஸியை ஊதித்தள்ளிய இந்தியா.. பாகிஸ்தானை முந்தி 2வது வரலாற்று சாதனை வெற்றி

IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் 1 – 1* என்ற நிலையில் சமநிலை பெற்ற அத்தொடரின் 4வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அபிஷேக் ஷர்மா 28 (21) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சிவம் துபே தடுமாற்றமாக விளையாடி 22 (18) ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 46 (39) ரன்களில் நாதன் எலிஸ் வேகத்தில் போல்டானார்.

- Advertisement -

இந்தியா நல்ல பவுலிங்:

மிடில் ஆர்டரில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 20 (10) ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 5, ஜிதேஷ் சர்மா 3 ரன்களில் அவுட்டான போதிலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 12 (7) ரன்கள் எடுத்தார். இறுதியில் அக்சர் பட்டேல் 21* (11) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 167/8 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ், ஆடம் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 168 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட்டை 25 (19) ரன்களில் காலி செய்த அக்சர் பட்டேல் அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷை 12 ரன்னில் போல்டாக்கினார். மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் 30 (24) ரன்னில் சிவம் துபே வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதோடு நிற்காத துபே அடுத்ததாக வந்து அடித்து நொறுக்க முயற்சித்த டிம் டேவிட்டையும் 14 (9) ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 91/4 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு லோயர் மிடில் ஆர்டரில் ஜோஸ் பிலிப் 19, மார்கஸ் ஸ்டோனிஸ் 17, கிளன் மேக்ஸ்வெல் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். இறுதியில் 18.2 ஓவரில் ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோருக்கு (119) ஆல் அவுட்டாக்கிய ஆசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2010இல் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 127 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டாக்கியதே முந்தைய சாதனை. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2வது குறைந்தபட்ச இலக்கை (168) வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: 93/6 டூ 204/8.. 18 சிக்ஸ்.. வெ.இ உலக சாதனை போராட்டம் வீண்.. நியூஸிலாந்து கடைசி பந்தில் வெற்றி

இதற்கு முன் 2022இல் கான்பெராவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 179 ரன்களை கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனை. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, சிவம் துபே 2, அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

Advertisement