ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. நேற்று நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 34 ரன்கள் அடித்தனர்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 246க்கு சுருட்டிய இந்தியா மகளிர் கிரிக்கெட்டின் புதிய உலகச் சாம்பியனாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக கேப்டன் லாரா சதமடித்து 101 ரன்கள் குவித்தும் தென்னாப்பிரிக்கா தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆட்டநாயகி ஷபாலி:
இந்த வெற்றிக்கு 87 ரன்கள், 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் காயமடைந்த பிரதிகா ராவலுக்கு பதிலாக கடவுள் தான் தமக்கு கடைசி நேரத்தில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்ததாக ஷபாலி கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தமக்கு பெரிய ஊக்கமளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஷபாலி பேசியது பின்வருமாறு. “இங்கே வந்து ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இங்கு அனுப்பினார் என்று நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். அது இன்று பிரதிபலித்தது. நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது கடினமானது என்பதால் என்றாலும் என் மேலே தன்னம்பிக்கை இருந்தது”
சச்சின் ஊக்கம்:
“இருப்பினும் அமைதியுடன் இருந்தால் என்னால் எதுவும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள் சகோதரர் உட்பட அனைவரும் எனக்கு ஆதரவளித்து எப்படி விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள உதவினர். அது எனக்கும் எங்கள் அணிக்கும் முக்கியம். நான் என்னுடைய அணியை வெற்றி பெற வைக்க விரும்புகிறேன். என்னுடைய மனது தெளிவாக இருந்ததால் எனது திட்டங்களில் வேலை செய்தேன்”
இதையும் படிங்க: 3 தோல்விகளை சந்தித்தும்.. இந்தியா 52 வருட வரலாறு காணாத உலக சாதனை வெற்றி.. வீழ்வேன் என்று நினைத்தாயோ
“அதை செயல்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். என்னுடைய சொந்த ஆட்டத்தை விளையாடுமாறு சீனியர்கள் சொன்னார்கள். அது போன்ற தெளிவு தான் உங்களுக்குத் தேவை. சச்சின் டெண்டுல்கர் சாரை பால்கனியில் பார்த்தது எனக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. அவரிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர் எனக்கு தொடர்ந்து தன்னம்பிக்கையைக் கொடுத்தார். கிரிக்கெட்டின் மாஸ்டரான அவரைப் பார்த்து நாங்கள் ஊக்கத்தைப் பெறுகிறோம்” என்று கூறினார்.



