ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்துள்ளது. நவம்பர் இரண்டாம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 3 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது.
வீழ்வேன் என்று நினைத்தாயோ:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். முன்னதாக அத்தொடரில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடியதால் 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடிய இந்தியா முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது.
இருப்பினும் இதே தென்னாப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடமும் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. போதாக்குறைக்கு இங்கிலாந்துக்கு எதிரான வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது. அப்படி ஹாட்ரிக் (3) தோல்வியை சந்தித்த இந்தியா செமி ஃபைனலுக்கு செல்ல நியூசிலாந்துக்கு எதிராக நிச்சயம் நன்றாக வென்றாக கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.
உலக சதம் வெற்றி:
அந்த வாழ்வா – சாவா போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 339 ரன்களை சேசிங் செய்து தோற்கடித்த இந்தியா உலக சாதனையுடன் ஃபைனலுக்கு சென்றது. தற்போது இறுதிப்போட்டியில் தெனாப்பிரிக்காவை தோற்கடித்துள்ள இந்தியா கோப்பையை வென்றுள்ளது.
இதையும் படிங்க: 50 வருட தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதிய இந்திய சிங்கப்பெண்கள்.. மகளிர் உ.கோ வென்று புதிய சரித்திரம்
இதன் வாயிலாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் 3 தோல்விகளை சந்தித்த பின்பும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. 1973 முதல் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பையின் 52 வருட வரலாற்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட வேறு எந்த அணியும் 3 தோல்விகளை சந்தித்த பின்பும் கடைசியில் கோப்பையை வென்றதில்லை. ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் (1992), இங்கிலாந்து (2019) மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



