ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. இருப்பினும் தரவரிசையில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் மிட்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதனால் இத்தொடரில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
வரலாற்று புள்ளிவிவரம்:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 32 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 20 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இத்தொடர் நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் அவ்விரு அணிகளும் 12 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 7, ஆஸ்திரேலியா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளன.
கான்பெரா மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள மனுக்கா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்குகிறது. 1929இல் தோற்றுவிக்கப்பட்டு 12000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள அம்மைதானத்தில் 2019 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு இதுவரை நடைபெற்ற 5 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இம்மைதானத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து அசத்தியது.
பிட்ச் ரிப்போர்ட்:
கான்பெரா நகரில் அக்டோபர் 29ஆம் தேதி 30% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் 10 – 20% மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே போட்டி சிறிய தடைகளைத் தாண்டி வெற்றியாளர் கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
மனுக்கா ஓவல் மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக இருந்து வருகிறது. எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்க சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மிடில் ஓவர்களில் நிச்சயமாக ஸ்பின்னர்கள் கணிசமான ஆதிக்கம் செலுத்துவார்கள்.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல.. ரெண்டு பேர் வெயிட் பண்றாங்க.. சுப்மன் கில்லை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ
இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 144. இங்கு வரலாற்றில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 2 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.



