இந்தியாவின் பிரபல உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 25ஆம் தேதி சண்டிகரில் எலைட் குரூப் பி பிரிவில் இருக்கும் மகாராஷ்டிரா – சண்டிகர் அணிகள் மோதிய போட்டி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அபாரமாக விளையாடி 313 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் 15 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 116 (163) ரன்கள் குவித்து அசத்தினர். அவருடன் சௌரப் நவாலே 66, அர்சின் குல்கர்ணி 50 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். சண்டிகருக்கு அதிகபட்சமாக அபிஷேக் சைனி, ஜெக்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பிரிதிவியின் அதிரடி:
அடுத்ததாக விளையாடிய சண்டிகர் முடிந்தளவு போராடியும் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ராமன் பிஸ்னோய் 54, நிசுங் பிர்லா 56* ரன்கள் எடுத்த நிலையில் மகராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக விக்கி ஓஸ்ட்வால் 6 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 104 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய மகாராஷ்டிராவுக்கு பிரிதிவி ஷா அதிரடியாக விளையாடினார்.
டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட டி20 போல அதிரடியாக விளையாடிய அவர் எதிரணி பவுலர்களை பந்தாடி 72 பந்துகளில் சதத்தை அடித்தார். தொடர்ந்து அதே வேகத்தில் எதிரணியை வெளுத்து வாங்கிய பிரிதிவி ஷா 141 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்தார். இதன் வாயிலாக ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் 3வது வேகமான இரட்டை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
3வது சாதனை இரட்டை சதம்:
முதல் 2 வேகமான இரட்டை சதங்களை தன்மய் அகர்வால் (2024இல், அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக, 119 பந்துகளில்) மற்றும் ரவி சாஸ்திரி (1985இல், பரோடாவுக்கு எதிராக, 123 பந்துகளில்) அடித்துள்ளார்கள். அவருடன் எதிர்ப்புறம் இணைந்து விளையாடிய அர்சின் குல்கர்னி 31, சித்தேஷ் வீர் 62 ருதுராஜ் கெய்க்வாட் 36* ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய டி20 தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா
அப்போது 359/3 ரன்களுடன் மகாராஷ்டிரா தங்களுடைய ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. களத்தில் பிரிதிவி ஷா 29 பவுண்டரி 5 சிக்ஸருடன் 222* (156) ரன்களை 142.31 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். ஒரு காலத்தில் அடுத்த சச்சின் என்று பாராட்டப்பட்ட அவர் மோசமாக விளையாடி நல்ல நடத்தையையும் இழந்தார். அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் போராடி வருகிறார். இறுதியில் சண்டிகர் 464 என்ற பெரிய இலக்கைத் துரத்தி வருகிறது.



