ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது ஆரம்பித்ததில் இருந்தே ஹர்ஷித் ராணாவின் தேர்வு பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் பெரியளவில் திறமை இல்லாத அவருக்கு கவுதம் கம்பீர் தான் முழு ஆதரவு வழங்கி விளையாட வைத்து வருகிறார் என்ற எண்ணம் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
3 ஆவது ஒருநாள் போட்டியில் அசத்திய ஹர்ஷித் ராணா :
அதற்கு ஏற்றார் போல் அவரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளிலும் பெரியளவில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வில்லை. அதனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்காது என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்படி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு சுருண்டது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 8.4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே ஆஸ்திரேலிய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லாமல் 250 ரன்களுக்குள் சுருண்டது.
அவரது இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் தன்மீதுள்ள விமர்சனங்களுக்கு தற்போது ஹர்ஷித் ராணா பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடிய போது இந்திய அணி மோசமான தோல்வியை சந்திக்கையில் தனிப்பட்ட முறையில் ஹர்ஷித் ராணாவின் மீதும், அவரது தேர்வு குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன.
இதையும் படிங்க : 3 ஆவது ஒருநாள் போட்டியில் நிதீஷ் ரெட்டி இடம்பெறாததற்கு என்ன காரணம்? – பி.சி.சி.ஐ விளக்கம்
இந்நிலையில் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் எடுத்து தன்மீது நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட்டுள்ளார். 3 வகையான இந்திய அணியிலும் ஹர்ஷித் ராணா தொடர்ந்து இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



