15 போட்டியில் ஐந்து 5 விக்கெட்ஸ்.. குல்தீப் யாதவ் உலக சாதனை.. இந்தியாவை திருப்பி அடிக்கும் வெ.இ?

IND vs WI Day 3
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 518/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 248 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 270 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யுமாறு வெஸ்ட் இண்டீஸ்க்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

திருப்பி அடிக்கும் வெ.இ:

அதை அடுத்து மீண்டும் ஆட்டத்தைத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தக்நரேன் சந்தர்பால் 10 ரன்களில் முகமது சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அலிக் அதனாஸ் 7 ரன்களில் சுந்தர் சுழலில் கிளீன் போல்ட்டானார். அதனால் 35/2 என மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது மற்றொரு துவக்க வீரர் ஜான் கேம்பல் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடினார்.

அவருடன் இணைந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் ஹோப் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல இந்திய பவுலர்களுக்கு சவாலைக் கொடுத்த அந்த ஜோடி 3வது நாள் மதியத்திற்கு மேல் விக்கெட்டை விடாமல் ஆட்டத்தை முடித்தது. அப்போது நிறைவுக்கு வந்த 3வது நாள் முடிவில் 173/2 ரன்களை எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 97 ரன்கள் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

குல்தீப் உலக சாதனை:

களத்தில் ஹோப் 66*, கேம்பல் 87* ரன்களுடன் இருப்பதால் இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவை திருப்பி அடிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது என்றே சொல்லலாம். முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் இடது கை மணிகட்டு ஸ்பின்னரான குல்தீப் யாதவ் தம்முடைய கேரியரில் 5வது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் ஆசிய பேட்ஸ்மேனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாபர் அசாம் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

இதற்கு முன் இங்கிலாந்தின் ஜானி வார்ட்லேவும்வும் 28 போட்டிகளில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் குல்தீப் யாதவ் 15 போட்டிகளிலேயே 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர் என்ற ஜானி வார்ட்லே சாதனையை உடைத்துள்ள குல்தீப் புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement