இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா முதுகு பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். தேவையான போது ஓய்வெடுத்துக் கொள்ளும் அவர் பணிச்சுமையை சரியாக கண்காணித்து பிசியோதெரபிகளின் ஆலோசனையுடன் சரியான இடைவெளியில் விளையாடி வருகிறார். அதேபோன்று இந்திய அணியின் நிர்வாகமும் அவரை தேவையான நேரத்தில் பயன்படுத்தி வருகிறது.
பும்ராவை இன்னும் பாதுகாப்பாக பாத்துக்கனும் : அபிஷேக் நாயர்
அதோடு அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு தேவைப்படும்போது ஓய்வையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய பும்ரா தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவை நாம் மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவருடைய பனிச்சுமையை இன்னும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என்பதை ஏற்கனவே கணித்திருந்தேன். ஏனெனில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் தொடரில் முழுவதுமாக விளையாடுவார் என்று நினைத்தேன்.
அதேபோன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டி பும்ரா இந்த போட்டியில் விளையாடுவார் என்றும் நினைத்தேன். இருந்தாலும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் மற்றும் அடுத்த அடுத்த டெஸ்ட் தொடர்கள் என முக்கியமான ஆட்டங்கள் இந்திய அணிக்கு காத்திருக்கின்றன.
இதையும் படிங்க : இன்னும் 10 ரன்கள் போதும்.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா
எனவே பும்ராவை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம். அவர் தொடர்ச்சியாக விளையாடும் பட்சத்தில் காயமடைந்து விட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



