இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது பல ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அதற்கிடையே தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்படாததும் பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 2024இல் கம்பேக் கொடுத்த அவர் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதே காரணத்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் அவருக்கு கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
முன்னேறிட்டு வாங்க பாக்கலாம்:
அந்த வாய்ப்பில் அபாரமாக பந்து வீசிய சக்கரவர்த்தி இந்தியா கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் பேட்டிங்கில் முன்னேறி தொடர்ச்சியாக நிறைய ஓவர்கள் வீசும் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கௌதம் கம்பீர் தம்மிடம் சொன்னதாக வருண் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே ஒருநாள் அணியில் தாம் கழற்றி விடப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அடிப்படையில் நீண்ட ஸ்பெல் வீசுவதைப் பற்றி விவாதம் அமைந்தது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அதிகபட்சமாக 2 ஓவர்களை அடுத்தடுத்து வீசுவீர்கள். ஆனால் ஒருநாள் போட்டிகளில் நீங்கள் தொடர்ச்சியாக 5 – 6 ஓவர்களை போட வேண்டும்”
வெளிப்படையாக சொன்ன கம்பீர்:
“அதில் வேலை செய்த என்னால் அதை சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றிகரமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர்த்து வேறு எதுவுமில்லை. அதே போல பேட்டிங்கை முன்னேற்றுவதற்காக உள்ளூரில் நான் கொஞ்சம் மேல் வரிசையில் பேட்டிங் செய்வதை கௌதம் கம்பீர் விரும்புகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நான் விளையாடவே விரும்புகிறேன். ஆனால் ஆல் ஃபார்மட்டிலும் என்னைத் தேர்வு செய்வது தேர்வாளர்கள் கையில் இருக்கிறது”
இதையும் படிங்க: விமர்சித்த வாய்களை பொய்யாக்க.. அந்த பலவீனத்தை சாம்பியன்ஸ் ட்ராபியில் சரிசெஞ்சேன்.. ஸ்ரேயாஸ் பேட்டி
“கௌதம் கம்பீருடன் ஏற்கனவே வேலை செய்துள்ள நான் ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இருந்துள்ளேன். இந்திய அணியிலும் அவரைச் சுற்றி நான் இருக்கிறேன். அவர் எப்போதும் தோல்விக்கான வேலையில்லை என்ற ஸ்பார்டன் மனநிலையைக் கொண்டவர். எனவே அவர் அணியில் இருக்கும் போது நீங்கள் சுமாராக செயல்படுவதற்கு இடமில்லை” என்று கூறினார்.



