தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், முன்னாள் இந்திய அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமே தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்தார். ஆனால் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவரை 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அந்த அணியின் நிர்வாகம் வெளியேற்ற முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனக்கு மதிப்புக்கான விலை அதுதான் : ரவிச்சந்திரன் அஷ்வின்
இவ்வேளையில் நிர்வாகம் முடிவெடுக்கும் முன்னதாக தானாக முன்வந்து ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வினை அறிவித்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து தான் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர இருப்பதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருந்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் பிக்பேஷ் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்த அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.எல்.டி டி20 லீக் ஏலத்திற்கும் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதில் பிக்பேஷ் ஏலத்தின் போது சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் ஏலத்தில் வாங்கப்பட்டு விட்டார். ஆனால் ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் அவரை எந்த ஒரு அணியும் வாங்க முன்வரவில்லை.
ஏனெனில் இந்த ஏலத்தில் தன்னுடைய அடிப்படை விலையை 1 கோடியே 6 லட்சம் ரூபாய் என்று அஸ்வின் பதிவு செய்திருந்தார். எந்த ஒரு வீரருக்கும் இல்லாத பெரிய தொகையை அஸ்வின் பதிவு செய்ததாலே யாரும் அவரை வாங்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. முதல் சுற்றில் அவர் வாங்கப்படா விட்டாலும் இரண்டாவது சுற்றின் போது யாராவது அவரை விலை குறைத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். இந்நிலையில் ஐ.எல்.டி டி20 ஏலத்திலிருந்து வெளியேறியது குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : என்னுடைய மதிப்புக்கு சரியான குறைந்தபட்ச விலையை தான் நான் நிர்ணயித்ததாக நினைக்கிறேன். என்னுடைய இந்த விலையை யாராவது அதிகம் என்று என்னை வாங்காமல் விட்டிருந்தால் அது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி தான். ஏனெனில் இந்த வயதில் நான் அதிகம் விளையாடாமல் இருப்பதும் சரியான ஒன்றுதான்.
இதையும் படிங்க : முடிவுக்கு வந்த 9 ஆண்டு ஏக்கம்.. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் சாதித்து காட்டிய – கே.எல் ராகுல்
ஏற்கனவே சிட்னி தண்டர்ஸ் அணிக்காக நான் ஒப்பந்தம் ஆகிவிட்டதால் ஏலத்தின் இரண்டாம் பாதியில் இருந்து விலக நினைத்தேன். ஐ.எல்.டி20 தொடருக்கு நான் வருவேன் என்று வாக்கு கொடுத்திருந்ததால் தான் ஏலத்திற்கு வந்தேன். ஆனால் என்னுடைய அடிப்படையை விலையை நான் ஒருபோதும் குறைக்க விரும்பவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



