ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் எதிரணிகளை அடித்து நொறுக்கினார். அதனால் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றிய அபிஷேக் மொத்தம் 7 போட்டிகளில் 314 ரன்களை குவித்து கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் ஐசிசி டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
அபிஷேக் சாதனை:
அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் எதிரணிகளை பந்தாடிய அவர் தற்போது கூடுதலான புள்ளிகளையும் பெற்று மொத்தம் 926 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் வாயிலாக வரலாற்றிலேயே ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசையின் அதிக ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அபிஷேக் படைத்துள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் 919 புள்ளிகளைப் பெற்றதே முந்தைய சாதனை. இந்திய அளவில் சூரியகுமார் யாதவ் 912, விராட் கோலி 909 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள். தற்போது அவர்களையும் முந்தியுள்ள அபிஷேக் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நம்பர் ஒன் அணியாக இந்தியா:
அவரைத் தவிர்த்து ஃபைனலில் அசத்திய திலக் வர்மா (3), கேப்டன் சூரியகுமார் (8) ஆகியோரும் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். டாப் 10 பவுலர்கள் பட்டியலில் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக அசத்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கிறார். குல்தீப் யாதவ் 12, அக்சர் பட்டேல் 13வது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.
இதையும் படிங்க: 6/3 டூ 181/6.. போராடிய நியூஸிலாந்தை அசால்ட்டாக சாய்த்த ஆஸி.. 2007 சைமன்ஸ் சாதனையை சமன் செய்த மார்ஷ்
டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவை ஹர்திக் பாண்டியாவை முந்தியுள்ள பாகிஸ்தானின் சாய்ம் ஆயுப் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பாண்டியா 2, அக்சர் பட்டேல் 10வது இடங்களில் உள்ளனர். அணிகள் தரவரிசையில் தொடர்ந்து இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிப்பது குறிப்பிடத்தக்கது.



