ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற அச்சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்து அசத்தியது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 202/5 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய இலங்கையும் 20 ஓவரில் 202/5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
அதன் பின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அபாரமாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் இலங்கைக்கு எதிராக 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு ஹசரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தில் சூரியகுமார் 3 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இலங்கையை தோற்கடிக்க அர்ஷ்தீப் இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.
பும்ராவை விட பெஸ்ட்:
ஆனால் அடுத்ததாக நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிறது. இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர் 100+ விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இருப்பினும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்கள் தேவை என்று கருதும் கௌதம் கம்பீர் அவரை முதன்மைப் போட்டிகளில் பெஞ்சில் அமர வைத்து துபேவை விளையாட வைக்கிறார்.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பும்ராவை காட்டிலும் அர்ஷ்தீப் சிங் தான் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது கட்டாயம் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பை துவங்குவதற்கு முன்பாகவே அர்ஷ்தீப் பிளேயிங் லெவனில் இருப்பது கட்டாயம் என்று தெரிவித்தேன்”
அஸ்வின் சாடல்:
“என்னுடைய கருத்தை அவர் மீண்டும் நிருபித்துள்ளார். அற்புதமாக முடிந்த அப்போட்டியில் அர்ஷ்தீப் ஏன் தன்னை கட்டாயமான வீரர் என்பதை காண்பித்துள்ளார். அப்போட்டியில் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு. ஆனால் அங்கே அர்ஷ்தீப் தமக்குத் தாமே சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் தன்னை இந்தியாவின் முதன்மை பவுலர்களில் ஒருவராக ஏன் இருக்கிறார் என்பதையும் காண்பித்தார்”
இதையும் படிங்க: தடுமாறி வென்றது இந்தியாவின் நன்மைக்கே.. சூரியகுமார் ஃபார்முக்கு வர இதை செய்யனும்.. கவாஸ்கர் அட்வைஸ்
“பும்ரா இருக்கும் போது அவரைப் பற்றி யாரும் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் டி20 ஃபார்மட்டில் அவர் இந்தியாவின் முதன்மையான பந்து வீச்சாளர் என்று சொல்வேன். ஏற்கனவே 100 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஏன் தன்னை சிறந்த வீரர் என்பதை மீண்டும் காண்பித்துள்ளார். 8வது இடத்தில் விளையாடத் தகுதியான அவரை உங்களால் கழற்றி விட முடியாது” என்று கூறினார்.



