இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்தாலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சமீபகாலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருந்தது.
ரெட் பால் கிரிக்கெட் இனி எனக்கு வேண்டாம் : ஷ்ரேயாஸ் ஐயர்
அதனை தொடர்ந்து இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தார். இந்த தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய அவர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரன துருவ் ஜுரேல் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இனிமேல் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்றும் ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு வேண்டும் என ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ-க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணிக்காக கடந்து 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் 2024 ஆம் ஆண்டு வரை 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன் 811 ரன்கள் குவித்துள்ளார்.
இவ்வேளையில் இனி ரெட் பால் கிரிக்கெட்டில் விளையாட விருப்பமில்லை என்பது போன்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான காரணம் யாதெனில் : ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தன்னால் நான்கு நாட்களுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதோடு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் சரி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி என்னுடைய உடற்தகுதியை கருத்தில் கொண்டே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னால் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்ற நிலைமை உண்டாகிவிட்டது. எனவே நான் ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவதாகும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : தேவையின்றி வம்பிழுத்த பாக் பவுலர்.. மாஸ் பதிலடி கொடுத்த ஹசரங்கா.. கடைசியில் பம்பிய பரிதாபம்
அதனால் தன்னை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வில் பரிசீலனை செய்ய வேண்டாம் என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிசி-யிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இனி அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்து விளையாட கவனம் செலுத்துவார் என்றும் தெரிகிறது.



