ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 171/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் அடித்தனர். அதனால் 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்ட இந்தியா 2வது முறையாக இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்தது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாய்ம் ஆயுப் ஹாட்ரிக் டக் அவுட்டானார்.
சர்ச்சைத் தீர்ப்பு:
அதனால் இம்முறை அவரை 3வது இடத்தில் விளையாட வைத்த பாகிஸ்தான் அனுபவ வீரர் ஃபக்கார் ஜமானை ஓப்பனிங்கில் களமிறக்கியது. அந்த வாய்ப்பில் 15 (9) ரன்கள் அடித்த அவர் ஹர்திக் பாண்டியா வேகத்தில் எட்ஜ் கொடுத்த பந்தை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்தார். அதை கள நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் பந்து தரையில் பட்டதாக கருதிய ஜமான் மறுபரீசிலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதை 3வது நடுவர் சோதித்த போது முதல் பார்வையில் பந்து தரையில் பவுன்ஸ் ஆவது போலத் தெரிந்தது. இருப்பினும் 2வது பார்வையில் பந்து சஞ்சு சாம்சனின் நுனி விரல்களில் பவுன்ஸாகி கைகளுக்குள் சென்றது தெளிவாகத் தெரிந்தது. அதனால் 3வது நடுவரும் அவுட் வழங்கியதால் ஜமான் ஏமாற்றத்துடன் தலையை அசைத்துக் கொண்டே வெளியேறினார்.
கேப்டன் ஆதங்கம்:
இந்நிலையில் நடுவரின் அந்த தவறான தீர்ப்பால் 190 ரன்கள் அடிக்க வேண்டிய பாகிஸ்தான் 171 ரன்களை மட்டுமே அடித்ததாக கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். இல்லையேல் 19வது ஓவர் வரை போராடிய பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியிருக்கும் என்று மறைமுகமாகக் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நடுவர்களும் தவறு செய்யலாம். ஆனால் பந்து கீப்பருக்கு முன் பவுன்ஸ் ஆனது போல் எனக்குத் தெரிந்தது”
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவுக்கு எதிராக பாக் வீரர் ஹாரிஸ் ரவுப் நிகழ்த்திய தனித்துவமான சாதனை – விவரம் இதோ
“ஒருவேளை என்னுடைய கணக்குத் தவறாகவும் இருக்கலாம். இருப்பினும் ஜமான் பேட்டிங் செய்த விதத்திற்கு பவர்பிளே முழுவதும் விளையாடியிருந்தால் நாங்கள் 190 ரன்கள் அடித்திருப்போம். ஆனால் அந்த முடிவை நடுவர்கள் எடுக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை அந்த பந்து கீப்பருக்கு முன் பவுன்ஸ் ஆனதாக தெரிந்தது. நான் சொல்வது தவறாக இருக்கலாம். அதே போல நடுவர் வழங்கிய தீர்ப்பும் தவறாக இருந்திருக்கலாம்” என்று கூறினார்.



