ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் மகளிரணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி புதிய சண்டிகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.
இந்தியா அசத்தல்:
அதிகபட்சமாக நம்பிக்கை நாயகி ஸ்மிருதி மந்தனா சதத்தை அடித்து 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் 117 (91) ரன்கள் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பவுலிங் செய்த இந்திய சிங்கப்பெண்கள் அணி 40.5 ஓவரில் 190 ரன்களுக்கு சுருட்டி வீசினர்.
அதிகபட்சமாக எலிஸ் பெரி 44, சதர்லாந்து 44 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட் 3, தீப்தி சர்மா 2 விக்கட்டுகள் எடுத்தார்கள். அதனால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதை விட 7 முறை உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனாகவும் திகழும் ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய 13 மகளிர் ஒருநாள் போட்டிகளில் 13 வெற்றிகளைப் பெற்றது.
18 வருடங்கள் கழித்து:
ஆஸ்திரேலியாவின் அந்த தொடர்ச்சியான வெற்றி நடையை இன்று இந்தியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் 4 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிரணி ஒரு ஒருநாள் போட்டியில் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு மெக்காய் நகரில் ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததே இந்தியாவின் கடைசி வெற்றியாகும்.
இதையும் படிங்க: 102 ரன்ஸ்.. ஆஸிக்கு எதிராக இந்தியா 2 உலக சாதனை வெற்றி.. 52 வருட வரலாற்றை மாற்றிய எழுதிய சரித்திரம்
அவை அனைத்தையும் விட 18 வருடங்கள் கழித்து இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாதனைப் படைத்துள்ளது. கடைசியாக 2007ஆம் ஆண்டு இந்திய அணி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்திருந்தது. இது போக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை 100+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



