இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியின் போது இங்கிலாந்து அணி இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள மூன்று போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.
துவக்க வீரர்கள் குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்த : முகமது கைப்
அதன் காரணமாக இந்த தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் 1 ரன் மட்டுமே குவித்த சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியின் போது அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷி துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இப்படி வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானது ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும் சஞ்சு சாம்சனை நீக்கியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் இந்திய துவக்க வீரர்கள் மாற்றம் குறித்த தனது விமர்சனங்களை கடுமையாக முன்வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து வருகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆரம்பத்தில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் அந்த காம்பினேஷன் சரியாக அமையவில்லை.
பின்னர் மீண்டும் சஞ்சு சாம்சன் வந்து மிகச் சிறப்பாக அந்த இடத்தை பூர்த்தி செய்து இந்திய அணி கோப்பையையும் வென்றது. இவ்வேளையில் உலக கோப்பை வென்ற அடுத்த இரண்டு மூன்று இன்னிங்ஸ்களில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்று மீண்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை அபிஷேக் சர்மாவும் வைபவ் சூர்யவன்ஷியும் நீண்ட கால துவக்க வீரர்களாக இருக்க முடியாது.
இதையும் படிங்க : ரஜத் பட்டிதாருக்கு இந்த வாய்ப்பை வழங்கினால் தான் அது சரியா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து
எப்போதுமே சஞ்சு சாம்சன் இரண்டு மூன்று மோசமான இன்னிங்சை விளையாடினால் மீண்டும் ஒரு சதம் அடித்து மீண்டு வருவார். அந்த வகையிலேயே இம்முறையும் சஞ்சு சாம்சன் மீண்டு வருவார் என்று எனக்கு தோன்றுகிறது. இதுபோன்று இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் துவக்க வீரராக இருப்பது நமது அணிக்கு சரியாக இருக்காது என முகமது கைப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



