இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் விராட், ரோஹித் இல்லாமல் படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது. அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய போதிலும் முகமது சிராஜ் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
ஏனெனில் அத்தொடரில் இரு அணிகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் யாரலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளிலும் விளையாடிய முகமது சிராஜ் அதிக (23) விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஸ்பெஷல் விருதை அறிவித்த ஐசிசி:
இருப்பினும் அன்றைய நாளில் நெருப்பாக செயல்பட்ட சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை மிராக்கள் வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் 2025 ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக முகமது சிராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அந்த விருதுக்கு இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெய்டேன் சீல்ஸ், நியூஸிலாந்தின் மாட் ஹென்றி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். அந்தப் பரிந்துரையில் சீல்ஸ், ஹென்றி ஆகியோரை முந்திய சிராஜ் 2025 ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த சர்வதேச வீரர் விருதை வென்றுள்ளார். அந்த ஸ்பெஷல் விருதை வென்றது பற்றி ஐசிசி இணையத்தில் சிராஜ் பேசியது பின்வருமாறு.
தொடர்ந்து உழைப்பேன்:
“ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வெல்வது ஸ்பெஷலான கௌரவம். ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை நினைவு கொள்ளக்கூடிய தொடராக அமைந்தது. அது நான் அங்கமாக இருந்த தொடர்களிலேயே மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக அமைந்தது. அத்தொடரில் சில முக்கியமான வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய தருணங்களில் என்னால் பங்காளிக்க முடிந்ததில் பெருமைப்படுகிறேன்”
இதையும் படிங்க: அந்த கஷ்டத்தை ஈஸியா சமாளிச்சு.. 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுக்கும் அபிஷேக்கிடம் அரிதான திறமை இருக்கு.. சேவாக்
“இவவிருது என்னுடைய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவுக்கும் சேரும். ஏனெனில் அவர்கள் எனக்குத் தொடர்ச்சியாக ஊக்கம் மற்றும் நம்பிக்கையைக் கொடுத்தார்கள். ஒரு சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்ட அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் பந்து வீசியது சவாலாக இருந்தது. ஆனால் அதுவே என்னுடைய சிறந்த செயல்திறனையும் வெளிக்கொண்டு வந்தது. அதே போல ஒவ்வொரு முறையும் இந்தியாவின் ஜெர்சியை அணியும் போது என்னுடைய சிறந்த செயல்திறனைக் கொடுப்பதற்காக நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்று கூறினார்.



