சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது இன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
மீண்டும் ஒன்றிணைந்த அண்டர் 19 நட்சத்திரங்கள் :
இதன் காரணமாக கடந்த பல தொடர்களாகவே துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஒன்றாக களமிறங்குவது இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் ஒன்றாக இணைந்து விளையாடியிருந்த அவர்கள் இருவரும் தற்போது சர்வதேச போட்டிகளில் இந்திய அணியில் ஒன்றாக துவக்க வீரர்களாக களமிறங்க இருக்கிறார்கள்.
14 வயதிலிருந்தே மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து வரும் அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அடுத்த கட்டத்தை பயணத்தை துவங்க உள்ளனர். சுப்மன் கில்லை பொறுத்தவரை அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் முடிந்த அடுத்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி விட்டார்.
ஆனால் அபிஷேக் ஷர்மா மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தனது திறனை நிரூபித்து கடந்த ஆண்டுதான் இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றார். ஏற்கனவே சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதினால் நிச்சயம் இந்திய டி20 அணிக்கு இந்த துவக்க வீரர்கள் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.
இதையும் படிங்க : இதயத்தில் இந்தியா இருப்பதே முக்கியம்.. இந்த ஃபிட்னெஸ் தேவையில்லை.. பிசிசிஐ’க்கு கவாஸ்கர் எதிர்ப்பு
ஒருபுறம் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசும் அதிரடி வீரராக அபிஷேக் சர்மா திகழும் வேளையில் மறுபுறம் சூழலுக்கு ஏற்ப கிளாசிக்காக விளையாடும் சுப்மன் கில் இணைந்திருப்பதால் இந்த ஜோடி ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.



