ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் ஒரு முறை கூட மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே வரும் செப்டம்பர் 30ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் 2011 போல சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்லத் தயாராகி வருகிறது.
மறுபுறம் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக தங்களுடையப் போட்டிகளை இலங்கையில் விளையாட உள்ளது. சமீப காலங்களில் பாகிஸ்தான் ஆடவர் அணி ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியைச் சந்தித்தது. அதனால் மகளிர் அணியாவது சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
தோனி மாதிரி வருவேன்:
இந்நிலையில் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அசத்துவதற்கு இந்தியாவின் ஜாம்பவான் எம்எஸ் தோனியை உத்வேகமாக எடுத்துக் கொள்வதாக பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சானா தெரிவித்துள்ளார். களத்தில் அமைதியாக முடிவுகளை எடுப்பது, வீரர்களுக்கு ஆதரவளிப்பது போன்ற தோனியின் கேப்டன்ஷிப் பண்புகளை கற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல தோனியின் நிறைய பேட்டிகளை பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நீங்கள் கேப்டனாக செயல்படும் போது ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றமடைவது இயற்கையாகும். ஆனால் அது போன்ற சூழ்நிலையில் நான் மகேந்திர சிங் தோனியை ஊக்கமாக எடுத்துக் கொள்வேன். இந்தியா மற்றும் சிஎஸ்கே கேப்டனாக அவர் விளையாடிய போட்டிகளை நான் பார்த்துள்ளேன்”
விரும்பும் பாகிஸ்தான் கேப்டன்:
“களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அமைதித்தன்மை, தன்னுடைய வீரர்களுக்கு ஆதரவளிக்கும் விதம் போன்ற நிறைய விஷயங்களை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். எனக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு கிடைத்த போது நான் தோனி போல வரவேண்டும் என்று நினைத்தேன். அவருடைய பேட்டிகளையும் நான் நிறைய பார்த்துள்ளேன். இம்முறை நாங்கள் தொடர்ச்சியாக தோற்று வரும் கதை நிச்சயம் உடைக்கப்படும்”
இதையும் படிங்க: அவரை மாதிரி தன்மையான மனிதரை பாக்க முடியாது.. தல தோனியுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து பேசிய – டேவால்டு பிரேவிஸ்
“ஏனெனில் எங்களுடைய இளம் வீராங்கனைகளுக்கு பாகிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் எங்களுடைய அணியை குறைந்தது செமி ஃபைனலுக்கு அழைத்துச் செல்வதே என்னுடைய லட்சியம். சர்வதேச போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மகளிர் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி உயர்த்தியது நல்ல முடிவாகும். அது பாகிஸ்தானில் இருக்கும் மகளிர் வீராங்கனைகளுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். நாங்கள் இந்தத் தொடரின் வாயிலாக உடைக்க பெரிய தடை இருக்கிறது” என்று கூறினார்.



