ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் பெற்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜிம்பாப்வே நாட்டிலுள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவரில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 277/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் கரண் 79, நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா 59, கிளைவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
நிஷாங்கா சதம்:
அடுத்து விளையாடிய இலங்கை துவக்க வீரர் பதும் நிசாங்கா நிதானம் கலந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்புறம் பெர்னாண்டோ 14, குஷால் மெண்டிஸ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். மறுபுறம் அசத்திய நிசாங்கா அரை சதத்தை அடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த சமரவிக்ரமா நிதானமாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் பெவிலியன் திருப்பினார்.
மிடில் ஆர்டரில் கேப்டன் சரித் அசலங்கா அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே அணிக்கு சவாலைக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து அசத்திய நிசாங்கா சதத்தை அடித்து 16 பவுண்டரியுடன் 122 (136) ரன்கள் குவித்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து விக்கெட்டை இழந்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அசலங்கா 7 பவுண்டரியுடன் அரை சதத்தை அடித்து விளாசி 71 (61) ரன்களில் அவுட்டானார்.
2019க்குப்பின் வெளிநாட்டில் வெற்றி:
இறுதியில் லியனகே 19* (16), கமிண்டு மெண்டிஸ் 5* (2) ரன்கள் எடுத்த உதவியுடன் 49.3 ஓவரில் 278/5 ரன்களை அடித்த இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்று இலங்கை அசத்தியது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 5 வருடங்கள் கழித்து இலங்கை அணி ஒரு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: நீ தான் உண்மையான ஹீரோ.. 2009 போல இளம் வீரருக்கு சாம்சன் நெகிழ்ச்சி பரிசு.. கம்பீர் கவனித்து வாய்பளிப்பாரா?
கடைசியாக 2019ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து மண்ணில் இலங்கை ஒரு ஒருநாள் தொடரை வென்றது. அதன் பின் தற்போது ஜிம்பாப்வே மண்ணில் தொடரை வென்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்கரவா, ப்ராட் எவன்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் சொந்த மண்ணில் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



