இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் உலகக் கோப்பை நாயகனாக போற்றப்படுகிறார். 2000 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தொடர்நாயகன் விருதை வென்றார். 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த அவர் 12 பந்துகளில் அரை சதத்தை அடித்து இரட்டை உலக சாதனைகள் படைத்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆட்டநாயகன் விருது வென்ற யுவ்ராஜ் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். 2011 உலகக் கோப்பையில் புற்றுநோயைப் பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக விளையாடிய அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த வகையில் யுவ்ராஜ் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
6 சிக்ஸருக்கு பரிசாக கார்:
அப்படிப்பட்ட யுவராஜ் சிங் 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததற்காக விலையுயர்ந்த போர்ஸ் கார் பரிசாகப் பெற்ற கதையை லலித் மோடி பகிர்ந்துள்ளார். முன்னாள் ஐபிஎல் கமிஷனரான அவர் 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிக்கும் வீரருக்கு போர்ஸ் காரை பரிசளிப்பேன் என்று இந்திய வீரர்களிடம் அறிவித்ததாக கூறியுள்ளார்.
அதே போல இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்ஸர்கள் அடித்த யுவ்ராஜ் சிங் தம்மிடம் ஓடி வந்து காரை பரிசாகக் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு 6 சிக்ஸர்கள் அடித்த பேட்டை நினைவுப் பரிசாக வாங்கிக்கொண்டு காரை யுவராஜுக்கு பரிசளித்ததாகவும் மோடி கூறியுள்ளார். இது பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் யூடியூப் பக்கத்தில் மோடி பேசியது பின்வருமாறு.
யுவ்ராஜ் பெற்ற பரிசு:
“2007 டி20 உலகக் கோப்பைக்கு முன் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பவர் அல்லது 6 விக்கெட்ஸ் எடுப்பவருக்கு போர்ஸ் கார் பரிசாகக் கிடைக்கும் என்று அனைத்து இந்திய வீரர்களிடமும் நான் கூறியிருந்தேன். அதே போல யுவ்ராஜ் 6 சிக்ஸர்கள் அடித்ததும் பவுண்டரியில் இருந்த என்னைப் பார்த்தார். அப்போதே பேட்டை உயர்த்தி என்னிடம் காட்டிய அவர் பின்னர் என்னிடம் ஓடி வந்து “எனக்கு என்னுடைய போர்ஸ் வேண்டும்” என்று சொன்னார்”
இதையும் படிங்க: 2021 ஜெய்லில் சேர்ந்து அழுக யாருமில்ல.. அப்போவும் நாட்டுக்காக விளையாடுவேன்னு சிராஜ் சொன்னாரு.. அருண் பாராட்டு
“அதற்கு உங்களுடைய பேட்டை எனக்குக் கொடுங்கள் என்று யுவராஜிடம் சொன்னேன்” எனக் கூறினார். இது போக ஹர்பஜன் சிங் 2008 ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோவையும் லலித் மோடி வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



