அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவின் தலைமையில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
2 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் நிகழ்த்தப்போகும் சாதனை :
இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாகவும் பங்கேற்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரானது கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாட இருக்கும் சூரியகுமார் யாதவ் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் நிகழ்த்த உள்ளார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 79 இன்னிங்ஸ்களில் நான்கு சதம் மற்றும் 21 அரைசதம் என 2598 ரன்கள் குவித்துள்ளார்.
அதில் ஒட்டுமொத்தமாக 237 பவுண்டரிகளையும், 146 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் மேலும் 4 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 150 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
முன்னதாக சர்வதேச அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசிய வீரராக ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து மார்ட்டின் கப்தில் 173 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து முகமது வாசிம் 168 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ
அதற்கடுத்து ஜாஸ் பட்லர் 160 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும், நிக்கலஸ் பூரான் 149 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்திலும், கிளன் மேக்ஸ்வெல் 148 சிக்ஸர்களுடன் ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 146 சிக்ஸர்களுடன் ஏழாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



