ஐபிஎல் தொடர் கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய தரமான வீரர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 18 வருடங்களாக ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் அத்தொடரில் நிறைய சர்ச்சையான நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக 2008 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தை மும்பை அணியின் ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது இன்று வரை மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
அந்தப் போட்டியில் மும்பையை பஞ்சாப் தோற்கடித்த பின் ஹர்பஜன் தம்முடைய கன்னத்தில் அறைந்ததாக ஸ்ரீசாந்த் அழுது கொண்டே தெரிவித்தார். அதை விசாரித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தது உண்மை என்பதைக் கண்டறிந்தது. அதனால் மேற்கொண்டு அந்த ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் விளையாடுவதற்கு அதிரடியான தடை விதிக்கப்பட்டது.
வெளியான வீடியோ:
இருப்பினும் நாளடைவில் அந்த சண்டையை மறைந்து ஹர்பஜன் – ஸ்ரீசாந்த் இருவருமே நண்பர்களாக மாறினார்கள். அதற்காக ஸ்ரீசாந்திடம் பலமுறை ஹர்பஜன் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் தம்முடைய அப்பாவை கன்னத்தில் அறைந்த உங்களிடம் பேச மாட்டேன் என்று ஸ்ரீசாந்த் மகள் தம்மிடம் சொன்னது மனதை உடைத்ததாக சமீபத்தில் ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த வீடியோவை அப்போதைய ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி வெளியிட்டுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு அவர் பேசியது பின்வருமாறு. “அன்று என்ன நடந்தது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன். அதற்கான வீடியோவையும் கொடுக்கிறேன். 2008இல் அதை நான் வெளியிடவில்லை”
17 வருங்கள் கழித்து:
“ஹர்பஜன் என்னுடைய நண்பர். அவரை விரும்புகிறேன். அது களத்தில் நடந்த போது நானும் இருந்தேன். அது ஹர்பஜன் – ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடையே நடந்தது. போட்டி முடிந்த பின் கேமராக்கள் மூடப்பட்டன. ஒரே ஒரு பாதுகாப்பு கேமரா மட்டும் தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. போட்டி முடிந்ததும் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் வழக்கம் போல ஒருவரை ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர்”
இதையும் படிங்க: எந்த பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்க பிடிக்கும்? சுவாரசியமான பதிலை அளித்த – ரோஹித் சர்மா
“அப்போது ஹர்பஜன் – ஸ்ரீசாந்த் இருவரும் அருகே வந்தனர். அந்த தருணத்தில் “இங்கே வா” என்று சொல்லி ஸ்ரீசாந்த்தை அழைத்த ஹர்பஜன் அவரது கன்னத்தில் தன்னுடைய கையால் அடித்தார்” என்று கூறினார். அந்த வீடியோவில் ஹர்பஜன் அடித்ததால் ஸ்ரீசாந்த் அழுகிறார். அடுத்த சில வினாடிகளில் அவர்களுக்கிடையே சண்டை வந்த போது இரு அணி கிரிக்கெட் வீரர்கள் உள்ளே புகுந்து தடுக்கிறார்கள். 17 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



